திருவலஞ்சுழியில் காவிரி நதியானது ஆதிசேஷன் உண்டாக்கிய பள்ளத்தில் இறங்கியபோது, ஹேரண்ட முனிவர் அப்பள்ளத்தில் புகுந்தபோது காவிரி வலமாக மேலே ஓடியது. அங்கு உள்ளே புகுந்த முனிவர் இத்தலத்தில் மேலே வந்தார் என்று கூறப்படுகிறது. அதனால் இத்தலம் 'திருவலம்புரம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'வலம்புரநாதர்' என்னும் திருநாமத்துடன், சற்று மெல்லிய பாணத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பாணத்தின் உச்சியில் சிறிய பள்ளம் போன்று உள்ளதால் பாணத்தின்மீது கவசம் சாத்தப்பட்டுள்ளது. அம்பாள் 'வடுவகிர் கண்ணம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
மகாவிஷ்ணு இத்தலத்து இறைவனை வழிபட்டு வலம்புரி சங்கு பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. இறைவன் திருநாவுக்கரசரை இத்தலத்திற்கு வரச் செய்து பதிகம் பாடச் செய்தார் என்று கூறப்படுகிறது. பட்டினத்தார் வழிபட்ட தலம்.
இவ்வூரின் கீழ்ப்பாகத்தில் 'கீழப்பெரும்பள்ளம்' என்னும் புகழ்பெற்ற நவக்கிரக கேது பரிகாரத் தலம் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும், சுந்தரர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|